தூத்துக்குடி: கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியே தூத்துக்குடி கடற்கரைக்கு இலங்கை தமிழர்கள் 21பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த 2 சிங்களவர்கள் என 23 பேர் தப்பி வந்தனர்.
பின்னர் அங்கிருந்து வாகனம் மூலமாக மதுரைக்கு வந்து கப்பலூர் அருகில் உள்ள செயல்படாத தொழிற்சாலை ஒன்றில் தங்கியுள்ளனர். இலங்கையை சேர்ந்த நபர்களுக்கு கனடா நாட்டிற்கு அனுமதி இல்லாத நிலையில் மதுரையில் உள்ள முகவர் காசிவிஸ்வநாதன் என்பவர் மூலம் போலி ஆவணம் தயார் செய்து கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்ற நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மதுரையிலயே தலைமறைவாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கையை சேர்ந்தவர்களை நாடு கடத்த முயற்சி செய்வதாக நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 23 இலங்கையை சேர்ந்த இளைஞர்களையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலியான ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை மதுரையில் தங்க வைக்க உதவியதாக மதுரை ரயிலார்நகர் பகுதியில் உள்ள தினகரன் என்பவரது வீட்டை உடைத்து காவலர்கள் சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பல்வேறு ஆவணங்களை காவலர்கள் கைப்பற்றினர். இலங்கை தாதா அங்கோடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் என்பது குறிப்பிடதக்கது,
இந்நிலையில் 23 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முன்னதாக அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையை சேர்ந்த 23பேர் சட்டவிரோதமாக கடல் வழியாக மதுரைக்கு தப்பி வந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை தாதா கோவையில் மர்ம மரணம், மதுரையில் உடல் எரிப்பு!