மதுரை திருமங்கலத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மார்க்கெட் பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடப்பதாகவும், இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில், திருமங்கலம் காவல் துறை சார்பில் பொதுமக்கள் இணைந்து 40 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கான முதல்கட்ட பணியாக, 100 கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்தது. சிசிடிவி கேமராக்களின் காவல் கட்டுப்பாட்டு அறை திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், திருமங்கலம் டிஎஸ்பி விநோதினி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து, திருமங்கலம் நகர்ப் பகுதி முழுவதும் 150க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.