ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அண்ணாநகர் பகுதியில் இயங்கிவரும் ரேஷன் கடையில் 783 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ சுண்டல் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சுண்டல் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்றனர். அப்போது ரேஷன் கடை பணியாளர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பி.ஹெச்.ஹெச். என்ற 3 எழுத்து உள்ள 233 குடும்ப அட்டைகளுக்கு மட்டும் சுண்டல் விநியோகம் செய்யப்படும் எனவும் என்.பி.ஹெச்.ஹெச் என்ற 4 எழுத்து உள்ள குடும்ப அட்டைகளுக்கு சுண்டல் வழங்கப்படமாட்டாது எனவும், துவரம் பருப்பு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சுண்டல் வழங்க வேண்டுமென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த தகவலறிந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழ்நாடு அரசு வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பி.ஹெச்.ஹெச் என 3 எழுத்து உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டும் சுண்டல் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதால் இவ்வாறு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.