ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பசுவபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் முகாமிட்டன. பகல் நேரங்களில் விவசாய தோட்டப் பகுதியில் யானைகள் முகாமிட்டதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
அதன்பின்னர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, தோட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் சுமார் 2 மணி நேரம் போராடி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், “தனது தோட்டத்தில் 300 தென்னை மரங்கள் இருந்தன. கடந்த மாதம் அதில் 250 மரங்களை யானைகள் சேதப்படுத்தின, மீதமுள்ள 50 மரங்களையும் யானை முறித்து சேதப்படுத்தியுள்ளது. தற்போது முதுமையில் வருவாய் இழந்து தவித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
வனப் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்