ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழையால் நெல் சாகுபடிக்குப் போதுமான தண்ணீர் உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன விவசாயிகள் தண்ணீரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானிக்குத் திறந்துவிடப்பட்ட 1,600 கனஅடி நீரானது, 1,200 கனஅடியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்குத் திறந்துவிடப்பட்ட 700 கனஅடி நீர் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 80 நாள்களுக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று தடப்பள்ளி அரக்கன்கோட்டை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்போது விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.