ஈரோடு: சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் புஞ்சைபுளியம்பட்டி அருகேவுள்ள பனையம்பள்ளி பகுதியில் தனக்குச் சொந்தமான காலி இடத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்திருந்தார்.
இதனை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட்ராவிடம் முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கொடுத்திருந்தனர். இதற்கு வெங்கட்ராவிற்கு உதவிகரமாக ராமமூர்த்தியும், மோகனசுந்தரமும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா காலம் வந்ததையொட்டி முன்பணம் வாங்கிய நபர்களுக்குப் பணத்தையும் திருப்பித் தராமல் இடத்தையும் கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
இது குறித்து பவானிசாகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம், திமுக நிர்வாகி ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட்ராவிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக நைசாகப் பேசி வெங்கட்ராவிடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கிவிட்டனர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வெங்கட்ராவிடம் மீண்டும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அந்தக் காலி மனையிடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது எனக் கூறி நீதிமன்ற கடிதத்தை காலிமனையில் வைத்துள்ளார்.
இதனால் வெங்கட்ராவிடம் 27 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நேற்று (அக். 7) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெங்கட்ராவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க: அரசியல் தலைவர்களிடம் பணம் மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு