வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெங்காயம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் பெருமளவில் நீரில் மூழ்கின. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததாலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழையால் வெங்காயம் அழுகியதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 100 ரூபாயை கடந்த வெங்காயத்தின் விலை, தற்போது புதிய உச்சமாக 200 முதல் 250 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் தரமான பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் 200 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் 250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சமையலுக்கு அத்தியாவசியமான வெங்காயத்தை தவிர்த்து, உணவு சமைக்க முடியாது என்பதால் விலை உச்சத்தை எட்டினாலும் வேறு வழியின்றி வெங்காயத்தைக் குறைவான அளவில் அதிக விலை கொடுத்தும் மக்கள் வாங்கி செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல்வேறு உணவகங்களில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்தப் படுவதால் அதன் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.