ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள நொச்சிக்குட்டை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊராட்சியில் உள்ள பொன்மேடு, நொச்சிக்குட்டை ஆகிய பகுதிகளுக்கு பவானிசாகர் அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், 15 நாள்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை எனக்கூறி 200க்கும் மேற்பட்ட மக்கள் புஞ்சைபுளியம்பட்டி திருப்பூர் சாலையில் இன்று (ஜுலை.12) காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்களும், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலியும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாள்களில் ஆழ்குழாய் அமைத்து உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல், நொச்சிக்குட்டை கிராமத்திலும் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர், அலுவலர்கள் அளித்த உறுதியின் பேரில் போராட்டதை கைவிட்டனர்.
இரண்டு இடங்களில் பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால், புஞ்சை புளியம்பட்டி திருப்பூர் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரசியலுக்கு கதம் கதம் - ரஜினிகாந்த்