ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. குறுகலான அபாயகரமான திம்பம் பாதையில் பொதுமுடக்கம் காரணமாக வாகனங்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் சாலையில் சென்று வந்த நிலையில், கர்நாகாவிலிருந்து கல் அறுக்கும் எந்திரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உள்பட மூன்று பேர் பயணித்த நிலையில், 25ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது, நிலைத்தடுமாறி லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியில் வந்த மற்ற இருவரும் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட மற்ற இருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கல் உடைக்கும் இயந்திரம் ஏற்றி வந்த லாரி அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக காவல் துறையினர் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை!