தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, இன்று(ஏப்.25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள், பார்களும் மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு, நேற்று(ஏப்.24) டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குவதற்கு மதுப்பிரியர்கள் திரண்டனர்.
கரோனா தொற்று பரவல் குறித்த எவ்வித அச்ச உணர்வின்றியும், மதுபானங்களை வாங்குவதற்கு ஏராளமானோர் ஒன்று திரண்டனர். முழு ஊரடங்கு நாளான இன்று அனுமதியின்றி சட்டவிரோதமான மதுப்புட்டிகள் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவடள்ளி இறைச்சிக் கடையில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்வது தெரியவந்தது.
அங்குச் சென்ற பார்த்தபோது மதுப்புட்டிகளை விற்பனை செய்துவந்த சுந்தராள் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து 245 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்ததோடு, சுந்தராளை கோபி மதுவிலக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகர் கோவில் தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்த பழனிச்சாமி, காளியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து, 100 லிட்டர் கள் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். ஊரடங்கின்போது சட்ட விரோதமாக மதுப்புட்டிகள், கள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுவிலக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.