பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் பவானி அந்தியூர் ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று கூடியபோது போராட்டத்திற்கு அனுமதியில்லை என மறுத்த காவல்துறையினர் மாணவர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத்திரும்பப்பெற வேண்டும் என்றும், பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு கடுமையானத்தண்டனை பெற்றுத்தரவேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்து தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அவர்களது எதிர்கால நலன் கருதி உடனடியாக தமிழக அரசின் மடிக்கணிகள் வழங்கவேண்டும் என்றும், தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதை கண்டித்தும் மாணவ மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர். அதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.