ஈரோடு: சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியில் முறையான அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருவதாகவும், அரசு அனுமதி பெறாமல் குழந்தைகளைத் தங்கவைத்திருப்பதாகவும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி, நலக்குழு உறுப்பினர்கள் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது புதுவடவள்ளி வேடர் காலனியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் சிறுவர்களைத் தங்கவைத்து குழந்தைகள் காப்பகம் செயல்படுவதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, காப்பகப் பொறுப்பாளர் கீழக்கரை என்பவரிடமும், குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரசு அனுமதியை முறையாகப் பெறாமல் குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற ஆறு சிறுவர்களைத் தங்கவைத்திருந்தது தெரியவந்தது.
சிறுவர்கள் மீட்பு
பின்னர், சிறுவர்கள் அனைவரையும் மீட்ட அலுவலர்கள் ராஜன் நகர் கஸ்தூரிபா நிகேதன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர். அரசு அனுமதி பெறாமல் சிறுவர்களைத் தங்கவைத்த கீழக்கரை மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்திவந்த கீழக்கரையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத குழந்தைகள் காப்பகம்: 19 சிறார்கள் மீட்பு