ஈரோடு மாவட்டம் குருமந்தூர், நம்பியூா் பகுதிகளில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 2.40 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
"சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போதே தற்காலிக ஆசிரியர்கள் என்றே பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பில்லை.
தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களில் மாணவர்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு சனிக்கிழமைகளில், 6 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும். மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.
நீட் தேர்வில், 90 விழுக்காடு கேள்விகள் நமது பாடத்திட்டம் மூலம்தான் கேட்கப்பட்டன. எத்தனைப் போட்டி தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்.
பாடத்திட்டம் குறைப்பு குறித்து, ஒரு மாதத்திற்கு முன்பே குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், 40 விழுக்காடு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கரோனா காலத்திற்குப் பின் விளையாட்டுத் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க : ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு