கரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மளிகைக் கடைகள், மருந்து கடைகள், பால் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு தளர்வு கொடுத்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக வந்தத் தகவலை அடுத்து ஈரோடு மதுவிலக்கு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 9) ஈரோடு ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் கண்ணதாசன் வீதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரை சோதனை நடத்தியபோது அவரிடமிருந்து 103 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மதுவிலக்கு காவல் துறையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நடராஜனை கைதுசெய்தனர்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த செல்வகண்ணன் என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களும், பெரம்பலூர் மாவட்டம் நேதாஜி தெரு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரிடமிருந்து 13 மதுபாட்டில்களும், திண்டுக்கல் மாவட்டம் மாசிலாமணி புரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் இருந்து 21 மதுபாட்டில்களும், திண்டுக்கல் மாவட்டம் ராகுல் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் இருந்து 36 மது பாட்டில்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
தொடர்ந்து அனைவரையும் ஈரோடு மதுவிலக்கு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள பள்ளியூத்து திருமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கர்நாடக மதுபாட்டில்கள் 8 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைதுசெய்துள்ளனர்.