ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட 10 வனச் சரகங்களில், வனத்துறையினரிடம் ரோந்துப் பணியின்போது பிடிபடும் குற்றவாளிகளிடமிருந்து விலைமதிப்பற்ற வனப் பொருள்கள் பறிமுதல்செய்யப்படும்.
இது தொடர்பாக கைதுசெய்யப்படும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கடத்திய பொருள்களைப் பறிமுதல்செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வழக்கு நடைபெற்றுவரும். இவ்வாறு குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல்செய்யப்படும் பொருள்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வழக்கு சாட்சியமாக காண்பிக்கப்படும்.
தற்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவுற்ற நிலையில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட 11 வகையான சிறுத்தை தோல், புலியின் நகம், சிறுத்தை எலும்பு, மான் கொம்பு, யானையின் கோரைப்பற்கள், போலியான சிறுத்தை தோல் உள்ளிட்ட பொருள்கள் மீண்டும் யாரும் பயன்படுத்தாதபடி தீயிட்டு அழிக்குமாறு தமிழ்நாடு வனத் துறை உத்தரவிட்டது.
உத்தரவைத்தொடர்ந்து பவானிசாகர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் கிரண் ரஞ்சன் தலைமையில் வனத் துறையினர் சமூக ஆர்வலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பறிமுதல்செய்த வனப்பொருள்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இதையும் படிங்க:புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு ஒரு லட்சம் அபராதம்!