ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுப்பீர்கடவு வனப்பகுதியில் செம்மலை ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று(ஜன.28) வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்காக வந்தபோது செம்மலை ஆண்டவர் கோயில் மலை அடிவார வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை காவல்துறையினர், வனத்துறையினர் பக்தர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
யானைகள் நடமாட்டம் உள்ள காட்டுப்பகுதி என்பதால் மாலையணிந்த, காவடி எடுத்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி உள்ளதாகவும் மற்ற பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என கூறியதால் பக்தர்கள் மலை அடிவாரத்தில் காத்து கிடக்கின்றனர்.
இதனால் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, வனத்துறையினர் பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அடர்ந்த காட்டுப்பகுதியில் 5 கி.மீ., தூரத்தில் உள்ள இக்கோயிலில் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதிப்பது வழக்கம். தற்போது யானைகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்று திறக்கப்படுகிறது - பொதுமக்கள் பார்வைக்கு தடை