ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேலுமணி நகரைச் சேர்ந்தவர் சுந்தரி. இவர் கணவர் உயிரிழந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் வீட்டின் பின்பகுதியில் வசிக்கும் மில் தொழிலாளி கமலா என்பவர் வேலை முடிந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, கள்ளிப்பட்டி பிரிவு அருகே வரும்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கமலாவிடம் கரோனா நிவாரண நிதி வந்துள்ளதாகக் கூறி உள்ளார்.
5 சவரன் நகை திருட்டு
மேலும், வீட்டிற்குச் சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் பைக்கில் ஏறுங்கள் எனக்கூறி உள்ளார். அதை நம்பிய கமலாவும், அந்நபரின் பைக்கில் ஏறி சுந்தரி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டிலிருந்த சுந்தரியிடமும் கரோனா நிவாரண நிதி 18 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதாகவும், அதைக் கொடுப்பதற்காக அலுவலர்கள் வருவதாகவும், நகை அணிந்திருந்தால் நிவாரண தொகையை தர மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
சுந்தரியும் அந்நபர் கூறியதை உண்மை என்று நம்பி, தான் அணிந்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை, வளையல் என மொத்தம் 5 சவரன் நகையை கழற்றி வீட்டிற்குள் இருந்த கட்டிலில் தலையணை அடியில் வைத்துள்ளார்.
அப்போது, அந்த நபர் 'டீ கிடைக்குமா' என்று கேட்டுள்ளார். சுந்தரியும் டீ போடுவதற்காக சமையல் அறைக்குள் சென்றுள்ளார்.
டீ போட்டுக்கொண்டு வந்து பார்த்தபோது, அந்நபர் அங்கிருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நகை இருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, நகையும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சுந்தரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கோபிசெட்டிபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கழுத்தை அறுத்த மாஞ்சா நூலால் இளைஞர் படுகாயம்!'