ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கெடாரையிலிருந்து பிலியம்பாளையம் செல்லும் தார்ச் சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாலையில் சரியான கலவையில் தார், ஜல்லி கற்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் தற்போதே தார் சாலை பழுதடைந்துள்ளதாகவும் கூறி இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கெடாரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாலைப் பணி ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்துக்கு எடுத்த தொகையிலிருந்து பாதியளவுகூட செலவழிக்கவில்லை எனவும் தரமற்ற தார்ச் சாலையை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் எனவும் கோரிக்கைவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்ததைவிடத் தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தால் புதிய தார் சாலை அமைக்கவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.