ஈரோடு: அந்தியூர் அருகேவுள்ள வெள்ளித்திருப்பூர் கொமராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தீபன் (35). இவரது வீட்டின் முன்பு கூரை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. இதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு சட்டம் அமைக்கும் வேலை நடைபெற்றுவந்தது.
இதில் அந்தியூர் சங்கராபாளையத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளர் வெற்றிவேல் (35), அவருடைய உறவினர்கள் இரண்டு பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வெற்றிவேல் வெல்டிங் எந்திரத்தை இயக்கியபோது அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி வீட்டில் வைத்திருந்த வெடிபொருள் மீது பட்டது.
சாலை மறியல்
அப்போது, வீட்டிலிருந்த வெடிப் பொருள்கள் வெடித்துச் சிதறின. இதில் வெற்றிவேல் மீது தீப்பிடித்து அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வெற்றிவேலின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், நேற்று (செப். 27) வெற்றிவேல் பட்டாசுகள் வெடித்து உயிரிழக்கவில்லை, வேறு வெடிபொருள்கள் வீட்டில் இருந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறை பேச்சுவார்த்தை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில், அம்மாபேட்டை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், வெடிப் பொருள்கள் வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பின் வீட்டின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இறந்த வெற்றிவேல் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து வெற்றிவேலின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
இதையும் படிங்க: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - காவல் நிலையம் முற்றுகை