தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் பனை மரங்களை நடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் பனை மர விதைகள் விதைக்கப்பட்டன. இந்த அமைப்புகளுக்கு விருது வழங்கும் விழா மற்றும் இயற்கை பனை பாதுகாப்பு கருத்தரங்கம் ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், சென்னை விமான நிலைய இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஈரோடு சிறகுகள், அன்பின் அறம் செய், சோலைவனம், ஓர் குடும்பம் ஓர் உலகம் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பனை விதைகளை நட்டதற்காக விருதுகள் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் வேப்ப விதைகளை விதைக்கும் புதிய திட்டமும் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய சமூக ஆர்வலர்கள், பனை மரங்களின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், இதனால் தண்ணீர் பிரச்னை இருக்காது எனவும் கூறினார்.
மேலும், பனை மரத்தின் அனைத்து பொருட்களுமே மனிதனுக்கு மிகவும் பயன்தரக்கூடியவை என்றும், அதனால் பனைமரங்களைக் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.