ஈரோடு: இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. உடனடியாக வீட்டு வரி விலக்கு அளிக்க வேண்டுமென முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வீடு கட்டித் தரவும், மற்ற மாநிலங்களில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி அளிக்கப்படுவதை போல தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் படை வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு செய்து தரவும், முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு அளிக்கப்படும் கேண்டீன் கார்டு திட்டத்தை எளிமைப்படுத்தியும், விதவைகளுக்கு 100% குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் மற்றும் விதவை சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார் முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் பழனியப்பன் மற்றும் விதவைகள் சங்கத்தின் தலைவர் தீபா ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும், போலீஸ் நிலையத்திற்குள் பழனியப்பன், தீபா ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய கார் அணிவகுப்பு ஊர்வலம்...