ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வளையக்கார வீதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து பறக்கும் படை குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பறக்கும் படை குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று தீவிரமாகக் கண்காணித்தபோது வாக்காளர்களுக்கு 5 பேர் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வில்லரசம் பட்டியைச் சேர்ந்த கோவிந்தசாமி (45), செந்தில் குமார் (31), ஜெகநாதன் (65), கணேசன் (50), மாதேஸ்வரன் (47) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரத்து 60 ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இதுகுறித்து ஈரோடு டவுன் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பேரில் 3 பேர் அதிமுக நிர்வாகிகள் என்பதும் மற்ற 2 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: உணவு பில்; திமுகவை சீண்டிய பாஜகவின் தேஜஸ்வி சூர்யா - மறுத்த உணவகம்!