சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் சிலர் அத்துமீறி வனத்துக்குள் நுழைந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து ஆசனூர் வனப்பாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹஸ்பட்ரிகரை என்ற இடத்தில் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக அவர் பதிலளித்தார். தொடர்ந்து அந்நபர் வனத்தில் அத்துமீறி நுழைந்தது தெரிய வந்ததையடுத்து, வனக்குற்றமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுஅருந்தியதாக திருப்பூரைச் சேர்ந்த நான்கு பேரைப் பிடித்த வனத்துறையினர், அவர்களை மாவட்ட வன அலுவலர் கே.வி.ஏ.நாயுடு முன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த அவர், நான்கு பேருக்கும் மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
அத்துமீறி நுழைபவர்களுக்கு அபராதம்
புலிகள் காப்பகத்தில் மது அருந்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்டப்படி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசனூர் வனக்கோட்டம் தெரிவித்துள்ளது. ஆசனூர் வனத்தில் இதுவரை அத்துமீறி திரிந்தாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசனூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் அதிக அளவில் நடமாடுவதால் விடுமுறை நாள்களில் அடர்ந்த காட்டுப்பகுதியில் யானைகளோடு புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும், அதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக யானைகள் மனிதர்கள்மீது நடத்தும் தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதால் உயிரிழப்புகளைத் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வனத்துறை அபராதம் விதித்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: 100ஆவது கிசான் ரயிலைத் தொடங்கிவைக்கும் பிரதமர்