ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிவசேகர் என்பவரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பு நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இதில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் அமானுல்லா என்பவர் கார் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிலையில் மத்திய, மாநில அரசு இயந்திரங்களை சீர்குலைத்து, மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதோடு, வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டதால் அமானுல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் பரிந்துரைத்தார்.
அதன் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அமானுல்லாவை சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற காவலில் கோபி செட்டிபாளையம் மாவட்ட சிறையில் இருந்த அமானுல்லா கோவை மத்திய சிறையில் நேற்று (அக்.18) அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்...பிஎப்ஐ பொறுப்பாளர் கைது