ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி துப்புரவுத் துறையில் 52 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பணியாற்ற வேண்டும். காலை 6 மணிக்கு வரும் இவர்களுக்கு காலை சிற்றுண்டி சாப்பிட இடைவெளி ஒதுக்காததால், தொடர்ந்து வேலைசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் இவர்களுக்கு தினக்கூலியாக தினமும் 413 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் வருங்கால வைப்பு நிதி போக 355 ரூபாய் அவரது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதிக்கான ரசீது எதுவும் வழங்கப்படுவதில்லை.
தற்போது பல்வேறு வைரஸ் நோய் தொற்று ஏற்படுவதால் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தற்காப்பு உபகரணங்கள், அதாவது காலணி, முகக் கவசம், கையுறை போன்றவை வழங்கப்படாமல், எந்தப் பாதுகாப்பு உபகரணமும் இன்றி வேலைசெய்ய வேண்டியுள்ளது.
இதனைத் தவிர்த்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், தினக்கூலி காலதாமதமின்றி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி பொறியாளர் துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தையடுத்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.