ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தீபக், இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக இவரின் மனைவி விஜயலட்சுமி மகள்கள் மதுநிஷா, தருணிகா ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் குதித்தார். இதில் விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மதுநிஷா உயிருடன் மீட்கப்பட்டார். அதே நேரத்தில் வாய்க்கால் நீரில் மாயமான தருணிகா இதுவரை மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் விஜயலட்சுமியின் தாயார் லட்சுமி கடத்தூர் காவல் நிலையத்தில் மகளின் தற்கொலைக்கு மருமகன் தான் காரணம் என புகார் அளித்துள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபக் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாகவும், கடந்த மூன்று மாதங்களாக தன் மகளை அடித்து துன்புறுத்தியதாகவும், சுமார் 15 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்களை தீபக்கிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் பணம் வாங்கி வர கூறி விஜயலட்சுமியை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த கடத்தூர் காவல்துறையினர் கணவர் தீபக்கை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு பெருகும் ஆதரவு... திடீர் போஸ்டரால் பரபரப்பு