ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் இயங்கி வரும் கிட்னிகேர் என்னும் தனியார் மருத்துவமனையின் பெயரில், சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், இதற்கான பதிவு கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத நபர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் போலியான பார்ஃவடு குறுஞ்செய்திகளை பரப்பியுள்ளனர். இதனை நம்பி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், அவர்கள் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனைக்கு தொலைபேசி வாயிலாக மக்கள் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். இதன் மூலம் மருத்துவமனை இயக்குநர் பிரபாகருக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்தததையடுத்து, அவர் ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தாா்.
இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நைஜீரியாவைச் சேர்ந்த ஸ்டீவன்பிரேங்க், கோலின்ஸ்ஆண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மோசடிக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்ஃபோன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இருவரும், இந்த மோசடி மட்டுமின்றி, வேலை தேடும் இளைஞர்களைக் குறிவைத்து இணையதளம் மூலம் வேலை பெற்று தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்களிடம் காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.