தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட பட்டாநிலங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் இன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
பின்னர் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாடு அரசின் சார்பில் பெருந்துறை சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கருமாண்டிச்செல்லிப்பாளையப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல நூறு ஏக்கர் பட்டா நிலங்கள் வழங்கப்பட்டது.
இந்தப் பட்டா நிலங்களைத் தனியார் சிலர் தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
இந்த முறைகேடு நடந்திருப்பது குறித்து விசாரணைக் குழுவை அமைத்து முறையாக விசாரணை மேற்கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிலத்தை மீட்டு மீண்டும் அவர்களுக்கே வழங்கிட வேண்டும்.
இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வருகிற சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துவேன்" எனத் தெரிவித்தார்.