ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் திண்டல் சக்தி நகரில் இரண்டு கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைப்பதற்கான பணிகளைத் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி நேற்று (நவம்பர் 15) தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து, செய்தியாளருக்குப் பேட்டி அளித்த அமைச்சர் சு. முத்துசாமி, "ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தோண்டப்பட்ட சாலைகளை மூடி செப்பனிட்டு சாலைகளை அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
புது கட்டடங்களுக்கு ஏற்பாடு
அந்தத் தொகை வந்தவுடன், விரைவில் பணிகள் தொடங்கும் என்பதுடன், மாநகரின் முக்கியச் சாலைகள் முதலில் சரிசெய்து சாலைகள் அமைக்கப்படும். இந்தப் பணிகள் முடியும்பட்சத்தில், ஈரோட்டில் பழுதுபட்ட சாலைகள் என்ற நிலையே இருக்காது. தமிழ்நாட்டில் வீட்டுவசதித் துறையின் சார்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
மேலும், தற்போது வீட்டுவசதித் துறையின் சார்பில் கட்டப்பட்டுவரும் கட்டடப் பணிகளையும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். மிக நீண்ட நாள்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களைப் பராமரிப்பதற்காக, அந்தந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் சங்கங்களை வைத்துள்ளனர். அவர்கள் ஒற்றுமையுடன் வந்தால் கட்டடங்கள் பராமரிப்புப் பணிகள், தேவையான புது கட்டடங்களை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடரும் தூர்வாரும் பணிகள்
சென்னையில் வீட்டுவசதித் துறையின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதியின் பல இடங்களில் தற்போது பெய்த மழை நீர் புகுந்துள்ளது. அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் ஒத்துழைப்புடன் மழை நீரை வெளியேற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகம், மின்சாரத் துறை, வீட்டுவசதித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இனிவரும் காலங்களில் மழையினால் இப்பகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மழைநீர் எங்கிருந்து வருகிறது, என்ன மாதிரியான பாதிப்பு ஏற்ப்படுத்துகிறது என்ற ஆய்வுசெய்து நீண்ட கால திட்டமாக வடிவமைக்கப்பட்டுவருகிறது.
இந்த மூன்று மாத காலத்தில் திமுகவால், வடிகால்கள் தூர்வாரப்படவில்லை எனக் கூறுவது தவறு. வழக்கமாக நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிர்பார்க்காத சில இடங்களில் நீர் அதிகளவில் வந்ததன் விளைவாகத்தான் நீர் தேங்கி நிற்கிறது. இதனை ஆய்வு செய்துவருகிறோம்.
அடுத்த மழையில் திமுகவை குறை கூறுங்கள்
அதிமுகவினர் அடுத்த மழையில் நீர் தேங்கி நின்றால் எங்கள் மீது குற்றஞ்சாட்டலாம். தற்போது அதிமுக குற்றம்சாட்டினால், நாங்கள் அவர்கள் மீது குற்றஞ்சாட்ட வேண்டிவரும். ஏனென்றால், கடந்த பத்தாண்டுகளில் எங்கெல்லாம் நீர் தேங்கியது, எங்கெல்லாம் சென்னையில் பாதிப்பு ஏற்படுத்தியது என்ற முழு விவரமும், அதிமுகவிடம் உள்ளது.
எனவே திமுக மீது குற்றம் சாட்டுவது தவறு எனபதுடன், இன்றைக்கு சென்னையில் எந்தப் பகுதியில் எல்லாம் நீர் தேங்கியதோ, அடுத்தமுறை வராமல் எங்களால் பார்த்துக் கொள்ள முடியும்" என்றார்.
இதையும் படிங்க: Cauvery Delta Crop Damage: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு