பொதுமக்களுக்கு தரமான காய்கறிகள் மிகவும் குறைவான விலையில் கிடைத்திடும் வகையில், மக்கள் வசித்திடும் பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு தினசரி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்து கொண்டு தங்களது விவசாயத் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழவகைகளை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்த உழவர் சந்தைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் வசதியாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு உழவர் சந்தை அலுவலர்கள் முன்னுரிமை வழங்குவதில்லை என்றும், உழவர் சந்தையில் முறையாகப் பதிவு செய்து விற்பனைக்கு கொண்டு வரும் பொருட்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கிடாமல் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்திடும் வெளி வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குவதாகவும், விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு வேளாண் அலுவலர்கள் வற்புறுத்துவதாக கூறி கொண்டு வந்த காய்கறிகளை விற்பனை செய்யாமல், கட்டுக்களைக்கூட பிரிக்காமல் வைத்தபடி விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சம்பத் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காய்கறிகளை வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உழவர் சந்தை அலுவலர்களிடம் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை விற்பனை செய்திட நாள்தோறும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றும், விவசாயிகளிடம் வேளாண் அலுவலர்கள் பணம் கேட்டு நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டுமென்றும், விவசாயிகள் கொண்டு வரும் பொருட்கள் தாமதமின்றி பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.