ஈரோடு: கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியிலிருந்து அரிசி தவிடு பாரம் ஏற்றிய டாரஸ் லாரி கும்பகோணம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தது.
அதில், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயராம் (48), கிளீனர் பச்சையப்பன் (40) ஆகியோர் இருந்தனர்.
அப்போது, 2ஆவது மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு மலைப்பாதை சாலையோரம் உள்ள 100 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி நின்றது.
இதில் ஓட்டுநர் ஜெயராம், கிளீனர் பச்சையப்பன் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. லாரியில் இருந்த தவிடு மூட்டைகள் பள்ளத்தில் சிதறி விழுந்தன. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பண்ணாரி சோதனைச்சாவடி காவல் துறையினர் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சத்தியமங்கலத்திலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரி மீட்கப்பட்டது. இவ்விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய குழு ஆய்வு: நாகையை மீட்டெடுக்க ரூ.200 கோடி... ஆட்சியர் அளித்த அறிக்கை