ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், அய்யன்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய் முதல் ரூ.300 வரை விற்பனையான நிலையில், தற்போது விசேஷ நாட்கள் முடிவடைந்ததால், பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையில் இன்று(அக்.18) சம்பங்கி பூ கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. இதன் காரணமாக சம்பங்கி பூக்களைப் பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், சம்பங்கி பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் விற்பனையாகாத ஒரு டன் பூக்களை சாக்கு மூட்டையில் இருந்து குப்பையில் கொட்டினர். சம்பங்கி பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து விற்பனையாளர்கள் பூக்களைக் கீழே கொட்டிய சம்பவம் அப்பகுதியில் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூக்கள் விலை வீழ்ச்சி அடையும் காலங்களில், இப்பகுதியில் வாசனை திரவிய ஆலைகள் அமைத்துப் பூக்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பங்கி பயிரிட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பாசத்துடன் வெளியான 'மருதாணி': 'அண்ணாத்த' மூன்றாவது பாடல் வெளியீடு