ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையின் இரு கரைகளிலும் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாசன வாய்க்கால்கள் மூலம் கோபிசெட்டிபாளையம் அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் 24504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல்போக சாகுபடிக்கு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தண்ணீர் திறப்பது வழக்கம். முன்னதாக, 11ஆம் தேதியான இன்று கொடிவேரி அணையிலிருந்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படும் என்றும் 16ஆம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் அரசாணை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் கொடிவேரி தடுப்பணையிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிகள் ஆகியோர் ஒன்றிணைந்து, மதகின் சுலட்டியை சுற்றி தண்ணீரைத் திறந்துவைத்தனர். சீறிப்பாய்ந்த தண்ணீரை மலர் தூவி வணங்கினர். தொடர்ந்து 135 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் 24504 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசனமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் மறைமுக பாசனமும் பெறுகிறது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர். இதன் கோப்புகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கும் விரைவில் தண்ணீர் திறக்கப்படும்” என்றார்
அதன்பின்னர் கொடிவேரி பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சுபிதளபதி கூறும்போது, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் முறைக்கேடாக நடைபெறும் தண்ணீர் திருட்டை பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.