ஈரோடு மாவட்டம் முள்ளாம்பரப்பில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்ய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் கொங்கு மண்டலத்தில் ரிங் சாலைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய ரிங்க் சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களிலுள்ள குளறுபடிகளை நீக்கி முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கொங்கு மண்டல மாவட்டங்களில் பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆத்தூர் ஆகியவற்றை அந்தந்த மாவட்டங்களிலிருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். உயர்மின்னழுத்த கோபுரங்கள் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை விரைவில் விடுதலை செய்யாவிட்டால் கட்சியின் சார்பில் விவசாயிகளை ஒன்று திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்டுப் பெற்று போட்டியிடும் என்று சொன்ன அவர், இடைத்தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திமுக கூட்டணியை ஆதரித்து அதற்கான களப்பணியை ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
'சிறப்புப் பொருளாதார மண்டலமும் வரல, வேலையும் தரல!' - விரக்தியில் வெகுண்டெழுந்த விவசாயிகள்
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை