ஈரோடு: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநில சுகாதார மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் கங்காதரசாமி ஐஏஎஸ் தலைமையிலான குழுவினர், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சித்துறையின் திட்டங்கள் மற்றும் சத்தியமங்கலம் வட்டார திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சத்தியமங்கலம் வட்டார ஊராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தரம் பிரித்தல், மட்கும் குப்பையை உரமாக்குதல், மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை இயந்திரத்தின் மூலம் அரைத்து மறுசுழற்சிக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கர்நாடக மாநில ஐஏஎஸ் அலுவலர் கங்காதரசாமி தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
அக்குழுவினர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் தேவையான தகவல்களைக் கேட்டறிந்ததோடு ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச்சென்றனர். இதைத்தொடர்ந்து அக்குழுவினர் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை உயரும் - வியாபாரிகள்