ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடி, கொள்ளேகால் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், வெங்காயம் சாகுபடிக்கு ஏற்ற சூழல் நிலவியதால் சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது விதை வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.40-லிருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது.
புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் ஆகியன விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி, இன்று (மே 26) கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட விதை வெங்காய மூட்டைகள் விற்பனை ஆகின. விதை வெங்காய விலை கிலோ ரூ.20 ஆக குறைந்ததால் விவசாயிகள் அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் இன்று விதை வெங்காய விலை குறைந்ததால் விவசாய நிலங்களில் நடவு செய்ய அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கி சென்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காய்ந்த மிளகாய் கிலோ ரூ.280 - விவசாயிகள் ஹாப்பி - வாடிக்கையாளர்கள் விரக்தி