ஈரோடு அடுத்த கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை டி.என். பாளையம் வனசரக்கத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. 42 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 28 அடிவரை மட்டுமே நீர் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குன்றி மல்லியம்மன்துர்கம், விளாங்கோம்பை, கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதியளவு மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்த அணை வனவிலங்குகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதனால் அணையின் தற்போதைய நீர் இருப்பு வனவிலங்குகளின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவு மட்டுமே உள்ளது. இதனிடையே அணை சார்ந்திருக்கும் பாசன விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு அரசாணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து வலது, இடது கரை பாசன வாய்க்கால்களுக்கு பொதுப்பணித் துறை அலுவலர்கள் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வணங்கினர்.
அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கொங்கர்பாளையம், வினோபாநகர், மோதூர், வாணிப்புத்தூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் அணையின் நீர் இருப்பை கருத்தில்கொண்டு முதல்கட்டமாக பத்து நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரும் பட்சத்தில் தொடந்து தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.