ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் பகுதியில் நேற்று (பிப்.21) நடைபெற்ற 2500 வீடுகள் கட்டும் பூமி பூஜை நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய அவர், “திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அறக்கட்டளையின் கீழ் சுமார் 2500 வீடுகள் திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவன பணியாளர்களுக்கு இப்பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஜவுளி பூங்கா ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அதில் சுமார் 7000 பேருக்கு ஒரு பகுதி நேரத்தில் வேலை கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு இங்கேயே வீடு கட்டிக் கொடுத்தால் அவர்கள் மன உளைச்சலின்றி, பணியாற்ற முடியும். அது மட்டுமல்லாமல் திருப்பூரில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். தமிழ்நாட்டில் பஞ்சு உற்பத்தி தேவை 10 விழுக்காடாக இருந்தது. இப்போது 3 விழுக்காடு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளிலிருந்து பஞ்சு கொண்டு வரப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. எனவே உற்பத்தியைக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு அளவாக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார்” என்று கூறினார்.