ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதி ஒன்றை 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருபவர் நிர்மலா. திருப்பூர் மக்களவை முன்னாள் உறுப்பினர் சத்யபாமாவின் கணவர் வாசு நிர்மலாவின் தொலைபேசியில் அழைத்து, உல்லாசமாக இருக்கப் பெண் தேவை என்றும், அதற்கு ஏற்பாடு செய்துதருமாறும் வற்புறுத்தினார்.
மேலும் விடுதில் என்னென்ன நடைபெறுகிறது என்று தனக்குத் தெரியும் என்று மிரட்டிய அவர், பெண் ஏற்பாடு செய்யாவிடில் நடக்கும் விபரீதங்களைக் காணத் தயாராக இரு எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தனது தங்கும் விடுதிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டுவருவதாக நிர்மலா புகார் தெரிவித்துள்ளார்.
ஆகையால் தனக்கும் விடுதிக்கும் பாதுகாப்பு வேண்டுமெனவும் அவதூறாகப் பேசிய வாசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரது புகாரை வாங்க மறுத்த காவல் துறையினர், நிர்மலாவை அவதூறாகப் பேசி அனுப்பியதாக நிர்மலா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் கோபிசெட்டிபாளையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது காவல் நிலையம் அல்ல தரகர் அலுவலகம் எனவும் ஒருமுறை கடவுச்சீட்டிற்கு ஒப்புதல் அளிக்க தன்னிடம் ரூ.20 ஆயிரம் கையூட்டு வாங்கியதாகவும் தெரிவித்தார். ஆகவே உயர் அலுவலர்கள் தலையிட்டு தனது புகாரைப் பதிவு செய்து உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் நிர்மலா மிரட்டல் விடுத்துள்ளார். இவரது சொத்துகள் மீது ஆசைப்பட்டு சிலர் இவருக்கு எதிராக வேலை செய்வதாகவும், இவரைக் கொலை செய்யும் நோக்குடன் சிலர் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.