ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஏர்கலப்பை கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் கடும் குளிரிலும் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில், புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஏர்கலப்பையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
ஏப்ரல் 1ஆம் தேதி அன்று அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார், ஏனென்றால் அன்று தான் முட்டாள் தினம். எல்லோராலும் எம்ஜிஆர், சிவாஜி ஆகிவிட முடியாது. சிவாஜியே மக்களை கணக்கு போடதெரியாமல் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். எம்ஜிஆர்-க்கு நிகரான செல்வாக்கை கொண்டவர் சிவாஜி. அதிமுக - பாஜக கூட்டணியானது அதிமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும்.
234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்று தான் எங்களுக்கும் ஆசை, ஆனால் அது சாத்தியமில்லை. திமுகவுடன் காங்கிரஸ் சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி, வேண்டிய தொகுதிகளை பெற்றுக்கொள்வோம். பாஜக வேல்யாத்திரை மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் பாஜக பல கோடிகளை செலவு செய்து வருகிறது. எத்தனை கோடி செலவு செய்தாலும் பாஜகாவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேலும், சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உலக சந்தையில் விலை குறைந்தாலும் இந்தியாவில் தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. பணக்காரர்களுக்காக வேளாண் சட்டங்களை மோடி கொண்டுவந்துள்ளார். நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டுள்ளது என்பது தவறு, மோடியின் தாடி தான் வளர்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.