ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை சாகுபடி செய்யப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நாட்களில் ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ வந்த மல்லிகை பூ தற்போது ஏக்கருக்கு 3 கிலோ மட்டுமே வருவதால் உற்பத்தி சரிந்தது.
கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவின் காரணமாக உற்பத்தி குறைந்ததால் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதில் கிலோ 1240 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று ஒரே நாளில் கிலோ 2650 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கொள்முதல் செய்யப்பட்ட பூக்கள் தமிழ்நாடு முழுவதும் கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் விமானம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. பூக்கள் விலை உயர்வால் திருமணத்திற்கான பூமாலையின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
சாதாரணமாக 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூ மாலை தற்போது 500 ரூபாய்வரை விற்கப்படுகிறது. இம்மாதம் இறுதிவரை பூக்களின் விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர் மல்லிகைப் பூவை போலவே முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:காதலர்களின் குதூகலத்தால், கிடுகிடு விலையுயர்வைச் சந்தித்த பூக்கள்!