காணும் பொங்கலையொட்டி கடம்பூர் செல்லும் வழியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மல்லியம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும் பூப்பறிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இத்திருக்கோயிலுக்கு சத்தியமங்கலம், வடக்குபேட்டை, கடம்பூர், அத்தியூர், கரளியம், காடகநல்லி, கானக்குந்தூர், குன்றி, மாக்கம்பாளையம், கோட்டமாளம், திங்களூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பொதுமக்கள் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வந்து மல்லியம்மனை தரிசனம் செய்தனர்.
இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். முன்னோர்களால் வழிபட்டு வந்த காவல் தெய்வம் கோயிலில் ஒரு ஐதீகம் உண்டு. மாமன் மகள்கள் மீது தாய்மாமன்கள் பூவைப் பறித்து வீசுவார்கள்; பிடித்திருந்தால் பதிலுக்கு அவர்களும் பூவை வீசுவார்கள். இந்த ஐதீகம் பூப்பறிக்கும் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இத்திருவிழாவையொட்டி கடம்பூர் காவல் துறையினரும், வனத்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்து வசதியில்லாததால் பெரும்பாலான பக்தர்கள் வாடகை வாகனத்தில் வந்தனர்.
விழாவையொட்டி சாலையோரம் தள்ளுவண்டி வியாபாரிகள் கடை அமைப்பதற்கு வனத்துறை அனுமதியளிக்கவில்லை. இதைத் தொடர்து அரை மணி நேர போராட்டத்திற்குப் பின் கடை அமைக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.