ஈரோடு: மாவட்டம் சித்தோடு அருகில் உள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் ஈரோடு, சூரம்பட்டி வலசு பகுதியில் வசித்துவரும் ரங்கநாதன் மகன் செல்வகுமார் (38) என்பவர் எம்.டி. காட்டன் மில் நடத்திவந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த மில்லில் 8 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
வேலை முடித்து வீட்டுக்குவந்த அவருக்கு நள்ளிரவு மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலைத் தொடர்ந்து ஈரோடு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையில் 3 தீயணைப்பு துறை வாகனங்கள், 20 வீரர்கள் எனச் சம்பவ இடம் சென்று விடிய விடிய போராடி மில்லில் ஏற்பட்ட தீயை பொதுமக்கள் உதவியுடன் அணைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ஈரோடு மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர், உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் விரைந்து சென்று தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தீயணைப்புத் துறையின் முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பிடித்திருக்கலாம். மேலும் வேறு காரணங்கள் உள்ளதா என விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் காட்டன் மில் 30-க்கு 50 அளவுடைய நகர் செட் உள்பட அனைத்து பகுதிகளும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. பஞ்சு மூட்டைகள், நூல்கள் என அனைத்தும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.