ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ருத்ரன் (45). விவசாயியான இவர் நண்பரான பவளக்குட்டையைச் சேர்ந்த பெரியசாமியுடன் இன்று (ஜன. 09) இருசக்கர வாகனத்தில் கணபதிபாளையத்திலிருந்து கடம்பூர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது இருட்டிபாளையம் கல்லாங்காடு வளைவில் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த வேன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த ருத்ரன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெரியசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வேன் ஓட்டுநர் தென்னரசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
மலைப்பாதையில் வளைவுகள் அதிகமாக உள்ள நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் எச்சரிக்கைப் பலகைகள் வைத்திருந்தால் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 62 பேருடன் காணாமல்போன இந்தோனேசியா விமானம்!