ஈரோடு: பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கே. சரஸ்வதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கடந்த 50 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ், திமுக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்தன.
சமூகநீதியை காப்பாற்றும் மோடி
வாக்கு வங்கிக்காக இதில் கவனம் செலுத்தவில்லை. ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்துள்ளது.
- சமூகநீதி என்பதற்கு பிரதமர் மோடியின் அரசுதான் இலக்கணம். முழுமையாக சமூகநீதி காப்பாற்றுவதும் இந்த அரசுதான்.
மேலும், 72 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக நீதி அனைவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது” என்றார்.
பிரதமருக்கு அக்கறை
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில், ஒன்றிய அரசின் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அதிக மக்கள் தொகை உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைவிட குறைவான மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
இது தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் பிரதமருக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. சமூக நீதியைக் காக்க ஒன்றிய அரசு கொண்டுவந்த 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஒன்றிய அரசின் ஏழை, எளிய மக்களுக்காகக் கொண்டுவந்த திட்டங்களையும் திமுக கொண்டுவந்ததாகப் பொய் பரப்புரை செய்துவருகின்றனர்.
ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலமாக காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: ஜான்குமாருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் வாய்ப்பு?