உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடைத் துறையின் சார்பில் வெறிநோய் தடுப்பூசிகள் முகாம் ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் கலந்துகொண்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகளைப் போட்டு முகாமினைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இதுபோன்ற தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாய்களை வளர்ப்பவர்கள் அரசுக்குத் தங்களது ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.
முதல்கட்டமாக வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டதற்குப் பிறகு மாநகராட்சித் துறையின் உதவியுடன் தெருநாய்கள் பிடித்துவரப்பட்டு வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் முறைகேட்டில் ஈடுபட்ட 570 நபர்கள் கண்டறியப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 40 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 20 லட்சம் மீட்கப்பட வேண்டியுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் பணம் எடுப்பதற்கான பாஸ்வேர்ட் அலுவலர்கள் கைவசமிருந்ததால் பெரிய அளவில் தொகை முறைகேடு நடந்திடவில்லை.
கரோனாவைப் பொறுத்தவரை ஈரோடு மாவட்டத்தில் ஏற்றமுமின்றி, இறக்கமின்றி ஒரே சீராக சென்றுகொண்டிருக்கிறது. பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்திட வேண்டும்" எனத் தெரிவித்தார்.