திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் முத்தூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஆறு லட்சம் ரூபாய் பணத்துடன் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ரவிக்குமாரின் பின்புறம் காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ரவிக்குமார் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மொடக்குறிச்சி அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை விசாரித்தபோது முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், கவுந்தப்பாடி நடேஷ்குமார், ஈரோடு மதன்குமார், நத்தக்காடையூர் அன்பழகன், தாண்டாம்பாளையம் சசிக்குமார் என்பதும் இவர்கள் ரவிக்குமாரிடம் கத்தியை காட்டி ஆறு லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பணம் இரட்டிப்பு மோசடி செய்த தம்பதி கைது - சேலத்தில் பரபரப்பு