தமிழ்நாடு - கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. பண்ணாரி முதல் கர்நாடக எல்லை புளிஞ்சூர் வரையிலான அடர்ந்த காட்டுப்பகுதியின் மத்தியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. யானைகளின் வாழ்விடமாகத் திகழும் தலமலை - குத்தியாலத்தூர் வழித்தடத்தில் யானைகள் ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதிக்குக் கடந்து செல்கின்றன.
இந்நிலையில், இன்று ஆசனூர் வனப்பகுதியிலிருந்து யானைகள் கூட்டமாகச் சாலையைக் கடந்து சென்றன. குட்டியுடன் யானைகள் கூட்டமாக இருப்பதால், யானைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், யானைகள் கடந்த செல்லும்போது அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு, யானைகள் காட்டுக்குள் செல்லும் வரை காத்திருக்குமாறும், அதனைத் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
யானைகளை முன் நின்று சுயப்படம் எடுப்பதும், சாலையைக் கடக்கும் போது புகைப்படம் எடுப்பதும் யானைகளுக்கு எரிச்சலூட்டும். இதனால் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், யானைகள் நடமாடும் இடங்களில் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆங்காங்கே யானைகள் சாலையைக் கடக்கும் பகுதி என விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.