ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிமுக, திமுக சார்பில் என தனித்தனியாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக ஒன்றியச்செயலாளர் மகேந்திரன் தலைமையில் முதலில் நடைபெற்ற விழாவில் தேசியகீதம் பாடப்பட்டு 99 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டு அதே மாணவியரிடம் பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 99 மாணவ,மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
தற்போது திமுக ஆட்சி என்பதால் அரசு விழாவாக திமுகவினர் ஒரு விழாவும், பவானிசாகர் சட்டமன்றத்தொகுதியும், பனையம்பள்ளி ஊராட்சியும் அதிமுகவினர் வசம் இருப்பதால் அதிமுகவினர் ஒரு விழாவும் நடத்தியது மக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவுக்காக காலை முதலே பள்ளி மாணவியர்கள் விழா முடியும் வரை 4 மணி நேரம் காத்திருந்தனர்.
பள்ளியில் அரசியல் சாயம் பூசக்கூடாது என பொதுவான அனைவரின் கருத்தாக இருக்கும் நிலையில் போட்டிக்போட்டுக் கொண்டு விலையில்லா மிதிவண்டிகள் தரும் நிகழ்ச்சி நடத்தியது மாணவியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துகுமரன்...விசாரணைக்கு பின் உடலை கொண்டுவர நடவடிக்கை