ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை இன்று(ஆக.24) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”முதலமைச்சர் உத்தரவின்பேரிலும், அறிவுறுத்தலின்பெயரிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணி செய்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
தேவையான ஆலோசனை, ஆங்காங்கே ஏற்படுகின்ற இடர்பாடுகள், பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். ஈரோடு மாவட்டத்திற்கு இரண்டாவது முறையாக தற்போது வந்துள்ளேன். முதலில் வெள்ளம் பாதித்தபோது வந்தேன். நேற்று பல்வேறு துறையில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது களப்பணிக்காக இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் பல்நோக்கு கட்டடப் பணிகள் ஆய்வு குறித்தும், ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மாதிரி பள்ளிகளின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. என்ன தேவைகள், என்ன சிரமங்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கையை சமர்ப்பித்து உயர் அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் எங்களைப் போன்ற கண்காணிப்பு அலுவலர்களின் முக்கியப் பணி. முதல் கட்டமாக தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்துறையை கையில் எடுத்துள்ளோம். ஒப்பந்தப்பணியாளர்களின் குறை குறித்து கேட்டு அறிந்தேன்” எனக் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இதன் மீது நடவடிக்கை எடுத்து ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழை வெள்ளப்பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை... காஞ்சி கலெக்டர் ஆய்வு